Tuesday, December 24, 2019

16 செல்வங்கள் – 16) துய்ய நின்பாதத்தில் அன்பு


மொழிக்கு முதன்மை
அகரம்
உலகுக்கு முதன்மை
இறைவன்

அவனன்றி ஓரணுவும்
அசையாது

அவன்

எல்லாம் வல்லவன்
எங்கும் நிறைந்தவன்
எல்லாம் அறிந்தவன்

தூணிலும் இருப்பவன்
துரும்பிலும் இருப்பவன்

சுதந்திரம் உடையவன்
தூய்மை உடம்பினன்
பேராற்றல் பெற்றவன்
பந்த
பாசங்கள் அற்றவன்

பேரருள் பெற்றவன்
இயற்கை உணர்வினன்
முற்றும் உணர்ந்தவன்
அளவிலா
ஆனந்தம் கொண்டவன்

நாம்
கற்றதன் பயன்

பகுத்தறிவு பெறுவது
மட்டுமல்ல
எண் குணத்தான்
நற்றாள் தொழுவதும்

விருப்பு வெறுப்பு
இல்லாதவன்
திருவடி நினைப்பவர்க்கு
துன்பம் ஏதுமில்லை

ஒப்புமை இல்லாதவன்
மலரடி சேர்ந்தவர்
மனக் கவலைகளால்
கண் கலங்குவதில்லை

நிலத்தின் மேல்
நீடுழி வாழ்பவன்
மனதில் வாழும்
இறையை நினைப்பவன்

இறை நம்பிக்கை
இல்லாத
தன்னம்பிக்கை
தருவதில்லை வெற்றி

நம்பினார் கெடுவதில்லை
நான்குமறை தீர்ப்பு
இது இந்துமதம்

நம்பிக்கை கொள்ளுங்கள்
நலம் பெறுவீர்கள்
இது கிறித்துவம்

இறை நம்பிக்கை
எவ்வளவோ
ஆண்டவன் அருளும்
அவ்வளவே
இது இஸ்லாம்

நல்வாழ்வுக்கு வேண்டும்

இறை நம்பிக்கை



- வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு

- Vellore Author P. Rajan Babu




16 செல்வங்கள் – 15) துன்பம் இல்லாத வாழ்வு


எல்லா உயிர்களும்
இன்புற்று வாழ

இறைவனால்
படைக்கப்பட்ட
ஓர்
இன்பச்சோலை
இந்த உலகம்

மனிதன்
தன் வாழ்வில்

இன்பத்தைத்
தவறாகப்
பயன்படுத்தியதால்
பெற்றதே துன்பம்

இன்பம் வருவதும்
துன்பம் வருவதும்
எடுத்த உடலின்
வரம் என்று
அவன்
தன்னைத் தானே
தேற்றிக் கொள்கிறான்

இன்பமும் துன்பமும்
யாவருக்கும் உண்டு
எனத்
தனக்குத் தானே
ஆறுதல் கொள்கிறான்

காலம்
ஒரு கட்டத்தில்
அவனுக்கு
உண்மையை
உணர்த்துகிறது

இன்பமும் துன்பமும்
உள்ளத்தின்
இயல்பு என்று.

ஒருவருக்கு
இன்பமாகப்படுவது
மற்றொருவருக்கு
துன்பமாகப்படுகிறது

ஒருவருக்கு
துன்பமாகப்படுவது
இன்னொருவருக்கு
இன்பமாகப்படுகிறது

அப்பொழுது

அவன் உள்ளத்தில்
”எது
உண்மையான இன்பம்....?”
என்று ஒரு
கேள்வி எழுகிறது
அதற்கான
விடையும் கிடைக்கிறது

”புறத்தில் காண்பது
இன்பம் இல்லை
அகத்தில்
அறிந்து தெளிவதே
உண்மை இன்பம்.”

இம்மையிலும்
மறுமையிலும்

எல்லோரும் விரும்பும்
இன்பச் செல்வம்

மகிழ்ச்சியான வாழ்வு



- வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு

- Vellore Author P. Rajan Babu




16 செல்வங்கள் – 14) கோணாத கோல்


ஒரு நாட்டை

மன்னன் ஒருவன்
மணிமுடி தாங்கி
ஆள்வது
மன்னராட்சி

மக்களுள் ஒருவன்
மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்டு
ஆள்வது
மக்களாட்சி

அரசன் என்றாலும்
அமைச்சன் என்றாலும்
அவனே
நாட்டின் உயிர்

அறம் தவறாதவன்
வீரம் குறையாதவன்
மானமே
உயிரெனக் கொண்டவன்
அரசன் - அமைச்சன்

இந்த
உண்மை உணர்ந்து

செங்கோன்மையுடன்
அரசாள்வது
அரசன் கடமை
அமைச்சன் கடமை

நாடு பெற்றிருக்கும்
நலங்களையும்
வளங்களையும்
மட்டுமல்ல

நாட்டையும் காப்பது
நல்வேந்தன் பொறுப்பு

செங்கோல் என்பது
நீதி தவறா ஆட்சி

வேந்தனுக்கு வெற்றி
வேலால் அல்ல
செங்கோலால்

செங்கோலே
புவியில் மழையையும்
நல்ல
வளத்தையும் வழங்கும்

மக்களை
மன்னன் காப்பான்
மன்னனைச்
செங்கோல் காக்கும்

உயிர்கள்
வான்மழை நோக்கி
குடிமக்கள்
செங்கோல் நோக்கி

மக்களின்
கண் காணாத் தெய்வம்
இறைவன்
கண் கண்ட தெய்வம்
முறை தவறா மன்னன்

பழி பாவம் இன்றி
மானத்துடன் வாழ
மன்னனுக்குரிய செல்வம்

வளையாத செங்கோல்



- வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு

- Vellore Author P. Rajan Babu





16 செல்வங்கள் – 13) தொலையாத நிதியம்


உலகில்

மனிதன் வாழ்ந்திட
அடிப்படைத் தேவை
மூன்று

உணவு உடை உறையுள்

சிறப்புடன் வாழ்ந்திட
அத்தியாவசியத் தேவை
மூன்று

கல்வி செல்வம் வீரம்

உடலுக்கு
வீரம் எனும் வலிமை
மனதிற்கு
கல்வி தரும் அறிவு
வாழ்வுக்கு
செல்வம் எனும் பொருள்

இங்கு

செல்வம் எனப்படுவது
பணம் அல்ல
மனிதனுக்கு
பயன்படும் அனைத்தும்

பணம் என்பது
பொருள்கள்
பரிமாற்றத்திற்காக
மனிதனால்
படைக்கப்பட்ட
ஓர் ஊடகம் மட்டுமே.

ஆனால் ... பணம்தான்

மனிதர்களை
இயந்திரங்களாக்கி
அவர்களின்
இன்பத்தை எங்கோ
தொலைத்தது

உலோகத்தால்
காகிதத்தால்
ஆனது என்றாலும்

பணம்தான்
இன்று உலகை
இயக்கும்
மற்றொரு செல்வம்

பணம் மட்டும்
வாழ்க்கையில்லை
பணம் இல்லாமலும்
வாழ்க்கையில்லை

சிந்தித்துப் பாருங்கள்

வாழ்க்கையில்
எது முக்கியம்
நிம்மதியா...? நிதியா...?
அமைதியா...? ஆடம்பரமா...?

பணத்தின் மதிப்பு
பதுக்கிவைப்பதில் அல்ல
பயன்படுத்துவதில்தான்
என்பது புரியும்

பணத்தின் பயன் ஈதலே
ஈதலுக்கு வேண்டியது

நீங்காத செல்வம்



- வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு

- Vellore Author P. Rajan Babu




16 செல்வங்கள் – 12) தடைகள் வாராத கொடை


தன்னிலும்
தகுதியில் தாழ்ந்தவருக்கு
ஈவது

“ஈதல்”

தன்னோடு
தகுதியில் ஒத்தவருக்கு
தருவது

“தருதல்”

தன்னிலும்
தகுதியில் மிக்கவருக்கு
கொடுப்பது

“கொடுத்தல்”

இம்மூன்றில்

இல்லறத்தார்
இனிது போற்ற
வேண்டிய தர்மம்

வறுமையில்
வாடுவோருக்கு
வழங்குகின்ற

“ஈகை” எனும் அறம்

அதனினும்
தரணியில் உயர்ந்தது

“கொடை” எனும் வரம்

அது

கேட்காமலே
கொடுத்திடும்
உள்ளம் சார்ந்தது

விருப்பு வெறுப்பு
இல்லாது
உள்ளதை
உள்ளன்போடு
அள்ளி வழங்குவது

முல்லைக்குத் தேர்
மயிலுக்குப் போர்வை
ஔவைக்கு அருங்கனி
தந்த
உயர்ந்த பண்பது

சிந்தித்து
கொடுக்காதது
கொடுத்தப்பின்
சிந்திக்காதது

தன்னிடம் உள்ளதை
மட்டுமல்ல
தன்னையே தருவது

மனித உயிர்க்கு
நன் மதிப்பு
கொடை பண்பால்
வரும் சிறப்பு

வள்ளல் என
வரலாறு போற்றிடும்
குணச் செல்வம்

இல்லையென்று
சொல்லாத உதவி



- வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு

- Vellore Author P. Rajan Babu





16 செல்வங்கள் – 11) மாறாத வார்த்தை


உள்ளம் மொழி மெய்
என்ற
மூன்றாலும்
தவறின்றி வாழ்பவன்

மனித வடிவில்
மகாத்மா

உள்ளத்தில் இருப்பது
உண்மை
வாய்வழி வருவது
வாய்மை
மெய்யால் செயற்படுவது
மெய்ம்மை

இதில்

ஆராய்ந்து
அறியப்பட்ட
உண்மை யாதெனில்

வாய்மையே
ஓர்
உயர்ந்த அறநெறி

வாய்மை
என்பது
சொல் வழுவாமை

உள்ளத்தில்
உள்ளதை
உள்ளபடி உரைப்பது

எந்தவொரு
உயிருக்கும்
தீதின்றி அமைவது

நன்மை
உண்டாக்குமானால்
பொய்யான
சொல்கூட
மெய்யென்று ஏற்பது

நீரில் குளிப்பதால்
உடல் தூய்மை
உண்மை பேசுவதால்
மனம் தூய்மை

மனச்சாட்சிக்கு
எதிராக
பொய் சொல்பவன்
மனச்சாட்சியாலே
தண்டிக்கப்படுவான்

மனதாலும்
பொய்யை
நினைக்காதவன்
மக்கள் மனதில்
நீங்கா
இடம் பிடிப்பான்

உள்ளம் அறிய
உண்மை பேசுபவன்
தானமும் தவமும்
செய்பவரிலும்
உயர்ந்த
நிலை பெறுவான்

உள்ளத் தூய்மைக்கு
வேண்டிய உயர்ந்த
அறச்செல்வம்

வாய்மை



- வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு

- Vellore Author P. Rajan Babu





16 செல்வங்கள் – 10) தாழாத கீர்த்தி


மண்ணில் பிறந்த
ஒவ்வொருவருக்கும்

வாழ்வின்
தொடக்கம் பிறப்பு
அதன்
முடிவோ இறப்பு

இடைபட்ட
காலம்தான்
அவர்கள் கையிருப்பு

அதை

வளர்ந்து கடக்காமல்
பயனுடன்
வாழ்ந்து கடப்பதே
அவர்தம் பொறுப்பு

நிலவுலகில்
இறந்தும் இறவா
நிலை பெற
அடைய வேண்டியது

புகழ் என்னும்
பெருஞ்சிறப்பு

புகழ் என்பது

நம்முடைய
நற்செயல்களின்
எதிரொலி

நன்மை அடைந்த
சமுதாயத்தின்
நன்றியுணர்ச்சி

அது
கேட்டும் கொடுத்தும்
விளம்பரத்தாலும்
பெறுவதல்ல

இல்லை என்று
இரந்தவருக்கு ஈந்து
வருவது

பண்பால் உயர்ந்து
புவியில் வாழ்ந்து
பெறுவது

அறிவால் திறமையால்
சாதனை புரிந்து
அடைவது

பிறந்தால்
புகழுடன்
பிறக்க வேண்டும்

இல்லையேல்

பிறவாது
இருக்க வேண்டும்

புகழ் ஒன்றே
வாழ்வில்
நிகரில்லாதது
அழிவில்லாதது

எல்லோராலும்
உயர்த்தி சொல்லப்படும்
உயர்வான செல்வம்

சரியாத புகழ்



- வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு

- Vellore Author P. Rajan Babu




16 செல்வங்கள் – 9) தவறாத சந்தானம்


தன்னலம் சார்ந்தது
துறவறம்
பிறர்நலம் சார்ந்தது
இல்லறம்

மனித வாழ்வில்
ஓர் ஆணும்
ஒரு பெண்ணும்

இல்லறம் என்னும்
நல்லறத்தில்

கணவன் மனைவியாய்
இணைந்து பெறும்
இன்பப் பரிசு

காதலுக்கும் கடமைக்கும்
ஆண்டவன் தரும்
அன்புப் பரிசு

பிள்ளைகள்.

ஈன்ற பொழுதில்
கண்ணுக்கும்
மழலைச் சொல்லால்
காதுக்கும்
உச்சி முகர்ந்தால்
மூக்குக்கும்
துழாவிய சோற்றால்
வாய்க்கும்
உடல் தீண்டினால்
மெய்க்கும்

என
ஐம்புலன்களுக்கு
மட்டுமல்ல

மனதிற்கும்
மகிழ்ச்சியூட்டும்

இல்லத்தின்
இன்ப ஊற்றுகள்.

வளர்ந்து
பெற்றோருக்கு

மதிப்பும் மரியாதையும்
பெற்றுத் தரும்

சொர்க்கத்தின்
திறவுகோல்கள்

பண்புடையர் என்று
பெயர் எடுத்து
தாய்க்கும்

அறிவுடையர் என்று
பெருமை பெற்று
தந்தைக்கும்

அளவில்லாத
ஆனந்தத்தை
அள்ளித் தரும்
பரம்பரை சொத்துக்கள்

வம்சத்தை
விருத்தி செய்திடும்
வாழையடி வாழைகள்

அனைவரும் வேண்டிடும்
தலைச்சிறந்த செல்வம்

குற்றமில்லாக் குழந்தைகள்



- வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு

- Vellore Author P. Rajan Babu




16 செல்வங்கள் – 8) அன்பு அகலாத மனைவி


இரு மனங்கள்
திருமணத்தால்
இணைந்து

இனிதே வாழ்வது
இல்லறம்

அதுவே
மனித வாழ்வில்
நல் வரம்

அந்த
இல்லற வாழ்வில்
இனிய துணை

மனைவி எனும்
துணைவி

அவள்

அன்பு எனும்
பண்பு கொண்டவள்

தாய்மை எனும்
தூய்மை கொண்டவள்

பொறுமை எனும்
பெருமை கொண்டவள்

உறவுகளைப் பேணி
இன்பத்தை அளிப்பவள்

கண்ணின்றி
காட்சியில்லை
மனைவியின்றி
மகிழ்ச்சியில்லை

குடும்பத் தலைவன்
ஆணாக இருந்தாலும்
பெண்ணால் மட்டுமே

இல்லறத்தை
இனிதே
நடத்த முடியும்

குடும்பத்தின்
ஆணிவேர் அவளே

இல்லாள்
நல்லாள் எனில்

இல்லறத்தில்
இல்லாதது
ஒன்றுமில்லை

இதனை
உணர்த்தியே

நாமகள்
நான்முகன் தலையில்

திருமகள்
திருமால் மார்பில்

மலைமகள்
மகேசன் உடலில்

இடம் பிடித்தனர்

வாழ்வில் நிகரில்லா
பெருஞ்செல்வம்

அன்பான மனைவி



- வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு

- Vellore Author P. Rajan Babu





16 செல்வங்கள் – 7) சலியாத மனம்


வாழ்க்கை
என்பது
பூந்தோட்டமல்ல
போர்க்களம்

அந்தப்
போர்க்களத்தில்

வெற்றிகள்
மட்டுமல்ல
தோல்விகளும்
தொடர்ந்து வரும்

ஏற்றங்கள்
மட்டுமல்ல
ஏமாற்றங்களும்
எதிர் கொள்ளும்

எதிர்நீச்சல்
போட்டால்தான்
இலக்கை
எட்ட முடியும்

கவனத்தோடு
கடக்கவேண்டிய
கரடுமுரடான
பாதை அது

கடந்து
செல்கையில்

அழவும் வைக்கும்
அதுவே
ஆறுதலும் சொல்லும்

சிரிக்கவும் செய்யும்
நம்மைச்
சிந்திக்கவும் வைக்கும்

சில நேரம்
சிறுகதையான
சோகங்கள்
தொடர்கதையாகும்

எதிர்மறை
எண்ணங்களோ
நமக்குள்
எட்டிப் பார்க்கும்

அச்சமயம்

மகிழ்ச்சியான
வாழ்க்கை என்பது

தடைகளற்ற
வாழ்க்கையல்ல
தடைகளை
வெற்றிக் கொள்வதே

என்பதை
உணர வேண்டும்

மயக்கமும் கூடாது
கலக்கமும் கூடாது

சலியாத மனமே
சாதிக்க வல்லது

சாதனைக்கு
வேண்டிய செல்வம்

கலங்காத மனம்



- வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு

- Vellore Author P. Rajan Babu