தன்னிலும்
தகுதியில் தாழ்ந்தவருக்கு
ஈவது
“ஈதல்”
தன்னோடு
தகுதியில் ஒத்தவருக்கு
தருவது
“தருதல்”
தன்னிலும்
தகுதியில் மிக்கவருக்கு
கொடுப்பது
“கொடுத்தல்”
இம்மூன்றில்
இல்லறத்தார்
இனிது போற்ற
வேண்டிய தர்மம்
வறுமையில்
வாடுவோருக்கு
வழங்குகின்ற
“ஈகை” எனும் அறம்
அதனினும்
தரணியில் உயர்ந்தது
“கொடை” எனும் வரம்
அது
கேட்காமலே
கொடுத்திடும்
உள்ளம் சார்ந்தது
விருப்பு வெறுப்பு
இல்லாது
உள்ளதை
உள்ளன்போடு
அள்ளி வழங்குவது
முல்லைக்குத் தேர்
மயிலுக்குப் போர்வை
ஔவைக்கு அருங்கனி
தந்த
உயர்ந்த பண்பது
சிந்தித்து
கொடுக்காதது
கொடுத்தப்பின்
சிந்திக்காதது
தன்னிடம் உள்ளதை
மட்டுமல்ல
தன்னையே தருவது
மனித உயிர்க்கு
நன் மதிப்பு
கொடை பண்பால்
வரும் சிறப்பு
வள்ளல் என
வரலாறு போற்றிடும்
குணச் செல்வம்
இல்லையென்று
சொல்லாத உதவி
- வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
- Vellore – Author P. Rajan Babu
No comments:
Post a Comment