மண்ணில் பிறந்த
ஒவ்வொருவருக்கும்
வாழ்வின்
தொடக்கம் பிறப்பு
அதன்
முடிவோ இறப்பு
இடைபட்ட
காலம்தான்
அவர்கள் கையிருப்பு
அதை
வளர்ந்து கடக்காமல்
பயனுடன்
வாழ்ந்து கடப்பதே
அவர்தம் பொறுப்பு
நிலவுலகில்
இறந்தும் இறவா
நிலை பெற
அடைய வேண்டியது
புகழ் என்னும்
பெருஞ்சிறப்பு
புகழ் என்பது
நம்முடைய
நற்செயல்களின்
எதிரொலி
நன்மை அடைந்த
சமுதாயத்தின்
நன்றியுணர்ச்சி
அது
கேட்டும் கொடுத்தும்
விளம்பரத்தாலும்
பெறுவதல்ல
இல்லை என்று
இரந்தவருக்கு ஈந்து
வருவது
பண்பால் உயர்ந்து
புவியில் வாழ்ந்து
பெறுவது
அறிவால் திறமையால்
சாதனை புரிந்து
அடைவது
பிறந்தால்
புகழுடன்
பிறக்க வேண்டும்
இல்லையேல்
பிறவாது
இருக்க வேண்டும்
புகழ் ஒன்றே
வாழ்வில்
நிகரில்லாதது
அழிவில்லாதது
எல்லோராலும்
உயர்த்தி சொல்லப்படும்
உயர்வான செல்வம்
சரியாத புகழ்
- வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
No comments:
Post a Comment