Tuesday, December 24, 2019

16 செல்வங்கள் – 14) கோணாத கோல்


ஒரு நாட்டை

மன்னன் ஒருவன்
மணிமுடி தாங்கி
ஆள்வது
மன்னராட்சி

மக்களுள் ஒருவன்
மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்டு
ஆள்வது
மக்களாட்சி

அரசன் என்றாலும்
அமைச்சன் என்றாலும்
அவனே
நாட்டின் உயிர்

அறம் தவறாதவன்
வீரம் குறையாதவன்
மானமே
உயிரெனக் கொண்டவன்
அரசன் - அமைச்சன்

இந்த
உண்மை உணர்ந்து

செங்கோன்மையுடன்
அரசாள்வது
அரசன் கடமை
அமைச்சன் கடமை

நாடு பெற்றிருக்கும்
நலங்களையும்
வளங்களையும்
மட்டுமல்ல

நாட்டையும் காப்பது
நல்வேந்தன் பொறுப்பு

செங்கோல் என்பது
நீதி தவறா ஆட்சி

வேந்தனுக்கு வெற்றி
வேலால் அல்ல
செங்கோலால்

செங்கோலே
புவியில் மழையையும்
நல்ல
வளத்தையும் வழங்கும்

மக்களை
மன்னன் காப்பான்
மன்னனைச்
செங்கோல் காக்கும்

உயிர்கள்
வான்மழை நோக்கி
குடிமக்கள்
செங்கோல் நோக்கி

மக்களின்
கண் காணாத் தெய்வம்
இறைவன்
கண் கண்ட தெய்வம்
முறை தவறா மன்னன்

பழி பாவம் இன்றி
மானத்துடன் வாழ
மன்னனுக்குரிய செல்வம்

வளையாத செங்கோல்



- வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு

- Vellore Author P. Rajan Babu





No comments:

Post a Comment